மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு விதிக்கும் வரியை உயர்த்தியதைத் தொடர்ந்து, தமிழக தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனம் தங்க நாணய விற்பனையை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சம்மேளனத் தலைவர் சபரிநாதன், இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது 2027 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். அன்னிய செலாவணியை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இதை அவர் பாராட்டியுள்ளார்.

அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக நகைக்கடை உரிமையாளர்கள் தங்க நாணய விற்பனையை உடனடியாக நிறுத்துவதாகவும், தங்க சேமிப்பு திட்டங்கள் உள்ளிட்ட ஊக்குவிப்பு திட்டங்களை விளம்பரப்படுத்தி மக்களை ஈர்ப்பதை தவிர்ப்பதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும், நகை வர்த்தகத்தை சார்ந்து வாழும் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தவும் இரண்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அதன்படி, கோல்டு இ.டி.எப். மற்றும் டிஜிட்டல் கோல்டு போன்ற தங்க முதலீட்டு தயாரிப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கேட்டுள்ளது.

அதேபோல், தங்க இறக்குமதியாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து புல்லியன் டீலர்களும் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கு மட்டுமே தங்கத்தை விற்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.