இஸ்லாமாபாத்: பாகிஸ்தான்–சவுதி அரேபியா இடையேயான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் துருக்கி மற்றும் கத்தார் இணைவதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான ‘நேட்டோ’வில் 32 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கூட்டணியில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால், அதை அனைத்து உறுப்புநாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதி, ஒன்றிணைந்து பதிலடி கொடுக்கும் அமைப்பாக அது செயல்படுகிறது. இதே மாதிரி இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து பெரிய பாதுகாப்புக் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தமே இந்த முயற்சிக்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது. தற்போது மேற்காசிய நாடுகளான துருக்கி, கத்தார் இணைவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெயரளவு கூட்டணி அல்ல; நான்கு நாடுகளின் தனித்துவமான பலங்களை ஒருங்கிணைக்கும் ‘மெகா கூட்டணி’ என பாகிஸ்தான் தரப்பு விளக்குகிறது.

மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பின், தங்களை பாதுகாத்துக்கொள்ள புதிய கூட்டணி தேவை என்ற உணர்வின் அடிப்படையிலேயே இந்த அணுகுமுறை உருவாகியிருக்கலாம் என சர்வதேச விவகார நிபுணர்கள் கருதுவதாக தகவல் கூறுகிறது.

இதனிடையே, இந்த ‘இஸ்லாமிய நேட்டோ’ முயற்சி இந்திய பாதுகாப்பு வட்டாரங்களிலும் கவனமாக கண்காணிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி ஏற்கனவே பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருவதால், எதிர்காலத்தில் இந்தியா பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால், அதை ‘கூட்டுத் தாக்குதல்’ எனக் கூறி மற்ற நாடுகளும் தலையிட வாய்ப்பு உருவாகலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது.