துபாய்: ஈரான்–அமெரிக்கா இடையே பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர், மார்ச் இறுதியில் தீவிரமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை பழிவாங்கும் நடவடிக்கையாக, யு.ஏ.இ. உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தப் பங்கு வகித்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் யு.ஏ.இ. மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டிக்காதது எமிரேட்ஸ் தலைவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், மதப் பிரிவு சார்ந்த சூழலும் பதற்றத்தை அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், யு.ஏ.இ.யில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் உள்ள நிலையில், பாகிஸ்தானின் ஷியா முஸ்லிம்கள் வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவாக செயல்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த பின்னணியில், யு.ஏ.இ. பாகிஸ்தான் தொழிலாளர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் கூறாமல் ஷியா பிரிவு பாகிஸ்தானியர்களை கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்திருந்து பின்னர் நாடு கடத்தும் நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், இந்த பட்டியலில் 15,000 தொழிலாளர்கள் இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு வழங்கிய 35,000 கோடி ரூபாய் கடனை யு.ஏ.இ. கடந்த மாதம் திரும்பப் பெற்றதாகவும், அது பாகிஸ்தானின் அன்னிச் செலாவணி கையிருப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்காகும் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.





