சென்னை: தமிழக சட்டசபையில் த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை தீர்மான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடுமையாக விமர்சனம் செய்தார். “புதுமையான ஆட்சி நடத்துவார்கள் என்று பார்த்தால், ‘புஷ்பா’ படம் போல ஆட்சி நடத்துகிறார்கள்” என அவர் கூறினார்.
வாக்காளர் எண்ணிக்கையை மேற்கோள் காட்டிய அவர், சட்டசபை தேர்தலில் 4.93 கோடி பேர் வாக்களித்ததாகவும், அதில் ஆளும் கட்சிக்கு 1.72 கோடி பேர் மட்டுமே வாக்களித்ததாகவும் தெரிவித்தார். மீதமுள்ள 3.21 கோடி பேர் ஆட்சிக்கு எதிராக வாக்களித்ததாக கூறி, 65% மக்கள் இந்த அரசை நிராகரித்துள்ளனர் என வாதிட்டார்.
சபையில் பெரும்பான்மை நிலை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். த.வெ.க. 108 இடங்களில் வென்றதாகவும், முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்று, அதில் ஒரு இடத்தை ராஜினாமா செய்ததாகவும் கூறினார். மேலும், திருப்பத்தூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் கூறியதால், ஆளும் கட்சியிடம் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதாகவும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 ஆதரவு இல்லை என்றும் தெரிவித்தார்.
கவர்னரிடம் பெரும்பான்மை ஆதரவு கடிதம் கொடுத்து ஆட்சி அமைக்கப்பட்டதாகவும், ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவே தங்கள் கூட்டணியில் இருந்த சில தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும் அவர் கூறினார். ஆனால் பின்னர், பா.ஜ. கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரு கட்சி எம்.எல்.ஏ.வை அந்த கட்சி தலைவருக்கே தெரியாமல் ஆதரவு தர வைத்ததாகவும், அ.தி.மு.க. பிளவுபட்ட ஒரு அணியையும் அரசுக்கு ஆதரவாக மாற்றியதாகவும் குற்றம்சாட்டினார்.
தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் அவர் பேசினார். இந்த மாதம் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகைக்காக 1.31 கோடி பேர் காத்திருக்கிறார்கள் என கூறிய அவர், மகளிருக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகளை நினைவூட்டினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்டாலின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட குடும்பநலத் திட்டங்கள் தொடர வேண்டும்; அதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும், குறைந்தபட்சம் சில வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





