உத்தரப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென வானிலை மாறி, சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருமேகங்கள் சூழ்ந்த பின்னர் காற்றின் வேகம் அதிகரித்து பலத்த மழை பெய்தது. காற்றின் தாக்கத்தால் மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின்கம்பங்கள் கீழே விழுந்தன; விளம்பர பதாகைகள் பறந்தன. இதனால் பல இடங்களில் மக்கள் மரங்கள் மற்றும் கட்டமைப்புகளின் கீழ் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.
மாவட்ட வாரியாக பிரயாக்ராஜில் 21 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து பதோஹி 18, மிர்சாப்பூர் 15, பதேபூர் 10 என உயிரிழப்புகள் பதிவாகின. உன்னாவோ மற்றும் பதுவான் நகரங்களில் தலா 6 பேர் உயிரிழந்தனர்; பிரதாப்கார்க் மற்றும் பேரலியில் தலா 2 பேர் பலியாகினர்.
சிதாப்பூர், ரே பரேலி, சந்தவுலி, கான்பூர் தேஹட், ஹர்தோய், சம்பல் பகுதிகளில் தலா 2 பேர் உயிரிழந்தனர். கவுசம்பி, ஷாஜஹான்பூர், சோன்பந்த்ரா மற்றும் லகமிபூரில் தலா ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் மரங்கள் விழுந்ததால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாகவும் பல வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், தடைகளை அகற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.





