மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ள இந்தியர்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் தற்போது கண்காணிப்பில் உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மாணவர் விசாவில் படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்த பின் ‘ஓ.பி.டி.’ (Optional Practical Training) எனும் பயிற்சி திட்டத்தின் கீழ் ஒரு முதல் இரண்டு ஆண்டுகள் வரை நிறுவனங்களில் பணியனுபவம் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த அனுபவத்தின் அடிப்படையில் பின்னர் வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆனால், இந்த ஓ.பி.டி. வாய்ப்பை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) தெரிவித்துள்ளது. ஆன்லைன் மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சில நிறுவனங்கள் இந்த மாணவர்களுக்கு வேலை வழங்கியதாக தெரியவந்துள்ளது.
இதில் சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து செயல்படுவதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர். இதன் காரணமாக, தொடர்புடைய மாணவர்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





