சென்னை: அ.தி.மு.க. அதிருப்தி அணியில் உள்ள ஐந்து எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்ததைத் தொடர்ந்து, விரைவில் முழு அமைச்சரவை அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 107 இடங்களை வென்று, காங்கிரஸ், வி.சி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் 13 இடங்களுடன் சேர்த்து 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இதற்கிடையில் அ.தி.மு.க. பிளவுபட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்தில் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் சந்தித்ததாகவும், அதன் பின்னர் அரசுக்கான ஆதரவு அதிகரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் முழு அமைச்சரவை பதவியேற்பு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலுமணி தரப்புக்கு, ஐந்து எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என்ற கணக்கில் மொத்தம் ஐந்து அமைச்சர் பதவிகளை வழங்க முதல்வர் விஜய் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 25 எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொண்டு, பழனிசாமி தரப்பிலிருந்து சிலரை இணைத்து 34 எம்.எல்.ஏ.க்கள் வரை கொண்டுவர வேண்டுமெனில் எட்டு அமைச்சர் பதவிகள் தேவை என சி.வி.சண்முகமும் வேலுமணியும் வலியுறுத்துவதாக அவர்களது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிருப்தி அணியில் வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், காமராஜ், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.




