சென்னை: அ.தி.மு.க.வில் பிரிந்து செயல்படும் இரு அணிகளும் தங்கள் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க தீவிரமாக முயற்சி மேற்கொள்வதால், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பேரத்தை உயர்த்தி வருகின்றனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான மோதலுக்குப் பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் 22 எம்.எல்.ஏ.க்களும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக செயல்படுகின்றனர்.
சட்டசபையில் த.வெ.க. அரசு பெரும்பான்மையை நிரூபித்தாலும், வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெற வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின. அதனால் முன்கூட்டியே அ.தி.மு.க. தரப்பில் இருந்து ஆதரவு வழங்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக அமைச்சர் பதவி மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் வழங்க த.வெ.க. ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பலன் முன்னணியில் உள்ள ‘மாஜி’க்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், வேலுமணி தரப்பில் உள்ள 12 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை தன் பக்கம் இழுக்க பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தேர்தலில் பலர் ரூ.15 கோடி வரை செலவு செய்து சிலர் கடனாளியாகியுள்ள நிலையில் ‘கடனுக்கு நான் பொறுப்பு’ என்ற உத்தரவாதம் அளிப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, வேலுமணி தரப்பும் ‘ஆட்சியில் பங்கு கிடைத்தால் நிலைமை மாறலாம்; பொறுமையாக இருங்கள்’ என எம்.எல்.ஏ.க்களிடம் பேசுவதாக கூறப்படுகிறது. இரு தரப்பின் வாக்குறுதிகளும் நிறைவேறாமல் போகலாம் என்ற அச்சத்தால், யார் அதிகமாக வழங்குகிறார்களோ அவர்களிடம் சாயும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் இரு தரப்பிடமும் கோரிக்கைகளை உயர்த்தி பேரம் பேசுகின்றனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.





