தைவான் விவகாரத்தை அமெரிக்கா சரியாக கையாளாவிட்டால், அமெரிக்கா–சீனா இடையே “நேருக்கு நேர் மோதல்” உருவாகும் அபாயம் இருப்பதாக சீன அதிபர் ஷீ ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

டிரம்பின் மூன்று நாள் அரசுமுறை சீனா பயணத்தின் போது, பீஜிங்கில் உள்ள ‘கிரேட் ஹால் ஆப் தி பீப்பிள்’ வளாகத்தில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சந்திப்பில் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம், ஈரான் தொடர்பான விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சீனா–அமெரிக்கா உறவில் தைவான் மிக முக்கியமானதும் உணர்ச்சிகரமானதும் என ஜின்பிங் கூறினார். இந்த விவகாரம் சரியாக கையாளப்பட்டால்தான் உறவு நீடிக்கும்; தவறினால் இரு நாடுகளின் மொத்த உறவையும் பேராபத்தில் தள்ளும் சூழல் உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், தைவான் விவகாரத்தில் சீனா கறார் காட்டினாலும், வர்த்தக ரீதியில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை டிரம்ப் வெளிப்படுத்தினார். ஜின்பிங்கை “சிறந்த தலைவர்” எனப் பாராட்டிய அவர், சீனாவை மதிப்பதாகவும், வர்த்தகத்தில் பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், போட்டி என்பது ஒருவரை ஒருவர் வீழ்த்தும் முயற்சியாக மாறக்கூடாது; மோதல் இரு தரப்புக்கும் நஷ்டமே என்றும் ஜின்பிங் வலியுறுத்தினார். இருப்பினும், “நேரடி மோதல்” என்ற அவரது எச்சரிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.