புதுடில்லி: சீனியர் வழக்கறிஞர் அந்தஸ்து தொடர்பான மனு விசாரணையின் போது, நீதித்துறை அமைப்பை பாதிக்க சமூகத்தில் உள்ள சிலர் முயல்கிறார்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் சூர்யகாந்த் கவலை தெரிவித்தார்.
டில்லி உயர் நீதிமன்றத்தில் சீனியாரிட்டி அந்தஸ்து வழங்கப்படவில்லை எனக் கூறி, ஒரு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் பக்ஷி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், சீனியர் அந்தஸ்து என்பது உரிமையாகக் கேட்டு பெறும் விஷயம் அல்ல என்றும், நடத்தையை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் வழங்கினாலும் அதை ரத்து செய்யும் நிலை வரலாம் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். நீதியரசர் பக்ஷி, சீனியாரிட்டியை உறுதி செய்வதைத் தவிர வேறு குறை உள்ளதா என கேள்வி எழுப்பி, இது நீதிமன்றம் வழங்கும் அங்கீகாரம்; அதை கோரி பெறக்கூடாது என்றும் கூறினார்.
மேலும், மனுதாரர் ஆதாரமற்ற வழக்குகளை தாக்கல் செய்வதாகக் கூறிய தலைமை நீதிபதி, முதலில் அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்த பின் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் மன்னிப்பு கோரி, முன் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
மன்னிப்பை ஏற்று முன் உத்தரவை திரும்பப் பெற்ற தலைமை நீதிபதி, டில்லியைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் பெற்றுள்ள பட்டங்களின் உண்மைத்தன்மை குறித்து சமூக வலைதள பதிவுகளைப் பார்த்து சந்தேகம் எழுவதாக கூறினார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு ஏற்ற வழக்கு வர காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தார். பின்னர், நீதித்துறையை தாக்கும் ‘ஒட்டுண்ணிகள்’ சமூகத்தில் இருப்பதாக எச்சரித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.





