புதுடில்லி: மேற்காசிய போர் சூழல் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் உருவான பொருளாதார அழுத்தத்தை சமாளிக்க டில்லி அரசு பல சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து அரசு ஊழியர்களும் வாரத்தில் இரண்டு நாள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஆறு மாதங்களுக்கு புதிய வாகனங்கள் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ரேகா குப்தா தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் உள்ள வாகன எண்ணிக்கையை சுமார் 60% வரை குறைத்துள்ளார். தற்போது அவரது கான்வாயில் நான்கு கார்கள் மட்டுமே உள்ளதாகவும், அதில் இரண்டு மின்சார வாகனங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்க ‘என் இந்தியா; என் பங்களிப்பு’ என்ற பிரசாரமும் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு அறிக்கையில், தனியார் பெருநிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு திங்கள்கிழமையும் ‘மெட்ரோ திங்கள்’ எனக் கடைப்பிடித்து அமைச்சர்கள், உயரதிகாரிகள், ஊழியர்கள் மெட்ரோவில் பயணிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் வாரத்தில் ஒரு நாள் வாகனத்தை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான போக்குவரத்து படி 10% உயர்த்தப்படும் என்றும், மாநில அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் அடுத்த ஓராண்டுக்கு வெளிநாட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மின் நுகர்வை குறைக்கும் வகையில் அரசு அலுவலகங்களில் ஏசி வெப்பநிலை 24–26 டிகிரி செல்ஷியஸில் பராமரிக்க வேண்டும்; மாஸ்டர் மின் பொத்தான்கள் நிறுவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலக நேரம் காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை மாற்றப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி அலுவலக நேரமும் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைகழகங்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்; சரக்குகளை லாரி மாற்றாக ரயிலில் அனுப்பும் வாய்ப்பு இருந்தால் வர்த்தகர்கள் அதை பின்பற்ற வேண்டும் எனவும் டில்லி அரசு தெரிவித்துள்ளது.





