தலைநகர் டில்லியில் ஓடும் தனியார் பஸ்சில் 30 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் கூறுகையில், மங்கோல்புரி பகுதியில் உள்ள ஆலையில் பணியை முடித்து வீடு திரும்பிய அந்த பெண், சரஸ்வதி விஹாரில் உள்ள ‘பி-பிளாக்’ பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த படுக்கை வசதி கொண்ட தனியார் பஸ்சின் நுழைவாயிலில் நின்ற நபரிடம் நேரம் கேட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் திடீரென பெண்ணை பஸ்சுக்குள் இழுத்துத் தள்ளி, பஸ்சை நங்லாய் நோக்கி (சுமார் 7 கி.மீ.) ஓட்டிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். ஓடும் பஸ்சிலேயே ஓட்டுநரும் நடத்துநரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், சுமார் இரண்டு மணி நேரம் போராடிய பின்னர் நங்லாய் மெட்ரோ நிலையம் அருகே இறக்கிவிட்டு தப்பியதாகவும் பெண் கூறியுள்ளார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ராணி பாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பீஹார் பதிவு எண்ணுடன் இருந்ததாக கூறப்படும் அந்த தனியார் பஸ்சை வழிமறித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கைது செய்து, பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகிறது.

தற்போது அந்த பெண் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த சம்பவத்தால் கடும் மனஅழுத்தத்தில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.