ஹார்முஸ் ஜலசந்தியில் நிலைமை “மிகவும் சிக்கலானது” என்றும், அந்த வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் பாதுகாப்பாக கடப்பதற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க புதுடில்லி வந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் அமெரிக்கா–ஈரான் இடையிலான நம்பிக்கையின்மை காரணமாக பேச்சுவார்த்தை சிக்கலடைந்துள்ளதாக கூறினார். ஈரான் தொடர்பான எந்த பிரச்னைக்கும் ஆயுதங்கள் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேற்காசியாவில் நிலவும் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் முடிவே உகந்தது என்றும், ஈரான் அணு ஆயுதங்களை எப்போதும் விரும்பியதில்லை என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அத்துமீறலால் ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், பேச்சுவார்த்தை நடக்கும் போதே அமெரிக்கா தாக்குதல் நடத்தியது இது இரண்டாவது முறை என்றும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்க பொருளாதார தடைகளை ஈரான் மக்கள் எதிர்கொண்டு வருவதாகவும், மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஈரான் அஞ்சாது என்றும் கூறினார். அமெரிக்க தடை ஈரானின் உறுதிப்பாட்டையும் கொள்கையையும் மாற்றாது எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஈரான் வரவேற்பதாக அராக்சி கூறினார். இந்தியாவுடன் உறவுக்கு ஈரான் முக்கியத்துவம் அளிப்பதாகவும், பழமையான நாகரிக காலம் முதல் நட்பு தொடர்வதாகவும், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆலோசனைகள் வலுவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





