சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, பல ரசிகர்கள் தன்னை “இசைக் கடவுள்” எனப் பார்க்கிறார்கள் என்று கூறி, தனது இசைப் பயணத்தை நினைவுகூர்ந்தார்.
இளையராஜா தனியாக முதன்முறையாக இசையமைத்த படம் அன்னக்கிளி. தேவராஜ் மோகன் இயக்கிய இந்தப் படத்தில் சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியானதற்கு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில், “உங்களுக்கு தான் 50 ஆண்டுகள்; எனக்கு ஆண்டுகளே கிடையாது” என்று கூறிய அவர், தற்போது பால்கியின் தமிழ் படத்திற்கு இசையமைத்து வருவதாக தெரிவித்தார். ஆண்டுகள் நகர்ந்தாலும், தன் உள்ளார்ந்த நிலை மாறவில்லை என்றும், தன் தொடக்க இடத்திலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இசையமைக்கும் போது எந்த நினைவும் இல்லாமல் இருப்பதாகவும், இசை மன அமைதியை கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். தன் இசையால் மக்கள் கொண்டாடுகிறார்கள்; தன் இருப்பு இல்லாவிட்டாலும் அந்தக் கொண்டாட்டம் இசையின் மூலம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜி.கே. வெங்கடேஷ், எம்.எஸ். விஸ்வநாதன், சலீல் சவுத்ரி உள்ளிட்ட பல இசைக் கலைஞர்களிடம் வாத்தியங்கள் வாசித்த அனுபவம் இருப்பதாகவும், 200 முதல் 250 படங்கள் வரை உதவி இசையமைப்பாளராக பணியாற்றியதாகவும் கூறினார். ஆனால் தனியாக முதலில் இசையமைத்த போது பல கேள்விகள் எழுந்ததாகவும், தனிக் காட்டில் விட்டது போல உணர்ந்ததாகவும், பல நாள் பயிற்சிக்குப் பிறகே அன்னக்கிளி பாடல்கள் உருவானதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.





