மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமுல் காங். (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருப்பு அங்கியுடன் ஆஜராகி, பொதுநல வழக்கில் வாதாடினார்.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், தேர்தல் முடிந்த பின் டிஎம்சி தொண்டர்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டதாக கட்சி தரப்பில் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில் வாதாடவே அவர் நீதிமன்றம் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி சுஜோய் பால் மற்றும் நீதிபதி பார்த்தசாரதி சென் அடங்கிய அமர்வு முன் மம்தா முன்வைத்த வாதத்தில், தேர்தல் பிந்தைய வன்முறையில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டதாக கூறினார். 10க்கும் மேற்பட்ட டிஎம்சி தொண்டர்கள் கொல்லப்பட்டதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டி, மக்களை காப்பாற்ற நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.
மம்தா பானர்ஜி 1982ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியதாகவும், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீதிமன்றத்தில் வாதாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, அவர் வழக்கறிஞர் உடையில் ஆஜரானது தொடர்பாக இந்திய பார் கவுன்சில் விளக்கம் கேட்டுள்ளது. முதல்வராக இருந்த காலத்தில் அவரது வக்கீல் உரிமம் புதுப்பிக்கப்பட்டதா, அது தற்போது நடைமுறையில் உள்ளதா என்பதற்கான விவரங்களை மேற்கு வங்க பார் கவுன்சிலிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





