தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட சுமார் 5 நாட்கள் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அதே பகுதியில் தொடர்கிறது. இதன் காரணமாக மே 15 அன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மே 16 அன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மே 17 அன்று திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இதேபோன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையாக, வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மே 15 முதல் மே 18 வரை மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில், இடையிடையே 60 கி.மீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





