புதுடில்லி: அடுத்தாண்டு முதல் நீட் தேர்வை இணையவழி/கணினி அடிப்படையிலான முறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், அதில் சமரசம் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். மே 3-ல் நடந்த தேர்வில் பிரச்னை இல்லை; மே 7-ல் நடந்த தேர்வில்தான் சிக்கல் எழுந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருவதாகவும், பல மாநில அரசுகளும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். வினாத்தாள் எவ்வாறு கசிந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் அரசு உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.
பணம், அதிகாரம் போன்றவற்றை பயன்படுத்தி மாணவர்களின் இடங்களை “மாபியாக்கள்” பறிப்பதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் கூறினார். மறு தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை; விருப்பமான தேர்வு மையத்தை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும், இதுகுறித்து என்டிஏ விரிவான அறிக்கை வெளியிடும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நீட் சர்ச்சை தொடர்பான வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்றும், தேர்வு அமைப்பில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.





