சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சிக்குள் சில முன்னாள் அமைச்சர்கள் துரோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டசபை தேர்தலில் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்த சூழலில், வெற்றி பெற்ற சில முன்னாள் அமைச்சர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்தால் ஆறு அமைச்சர்கள் பதவிகளும், 10 வாரிய தலைவர் பதவிகளும் வழங்கப்படும் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி செயல்பட்டதாக கூறினார்.

கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவுக்கு மாறாக, அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்ததாகவும், இதை அ.தி.மு.க.வுக்கு செய்த “மாபெரும் துரோகம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், துரோகம் செய்தவர்கள் தன் மீது பல்வேறு அவதூறுகளை சுமத்தி வருவதாகவும், அது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். அமைச்சர் மற்றும் வாரிய பதவிகளுக்காக சுயநலத்துடன் செயல்படும் சிலரிடம் நிர்வாகிகளும் தொண்டர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

ஜெயலலிதா ‘அ.தி.மு.க. மக்களுக்காக இயங்கும்’ என சூளுரைத்த நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக பழனிசாமி கூறினார். கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றும், கட்சி மேலும் வலுப்பெற அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.