ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் லட்டு விற்பனை மற்றும் இலவச பிரசாத விநியோகத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, 6 கோயில் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 3 ஆண்டுகளில் ரூ.3.40 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கோயிலில் தினமும் 30 கிராம் எடையிலான 1,520 லட்டுகள் இலவச பிரசாதமாக வழங்கப்படுகின்றன. மேலும், கோயில் வளாகத்தில் உள்ள கவுன்டரில் 50 கிராம் லட்டு ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனையை கண்காணிக்க பஞ்சமூர்த்தி நியமிக்கப்பட்டிருந்தார்.
இணை ஆணையர் வெளியிட்ட அறிக்கையின்படி, மார்ச் 14-ஆம் தேதி லட்டு தயாரிப்பு கூடத்தில் ஆய்வு செய்தபோது மூலப்பொருட்களின் இருப்பு குறைவாக இருந்தது. 2023 முதல் 2026 பிப்ரவரி வரை லட்டு விற்பனையை குறைவாக கணக்கு காட்டியதாகவும், ஆய்வுக்குப் பிறகு கூடுதலாக விற்பனை நடந்தது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டப்படாத கூடுதல் லட்டுகளை தயாரித்து விற்று, வருவாயை தனிப்பட்ட கணக்கில் சேர்த்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 22.71 லட்சம் லட்டுகள் இவ்விதமாக விற்றதால் ரூ.3,40,65,000 மோசடி நடந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடையவர்களாக பஞ்சமூர்த்தி, அவரது மகன் விக்ரம் மற்றும் விற்பனையாளர்கள் சிவனேஸ்வரி, செல்வி, லாவண்யா, அம்பிகா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.





