கேரளாவின் அடுத்த முதல்வராக கட்சியின் மூத்த தலைவர் சதீசனை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. இதன் மூலம் முதல்வர் தேர்வில் சுமார் 10 நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

கேரள சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்றது. 140 தொகுதிகளில் 102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எப்.) ஆட்சியை கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி தோல்வியடைந்து ஆட்சியை இழந்த நிலையில், முடிவுகள் வெளியானதும் பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

யு.டி.எப். வெற்றிக்குப் பிறகு யார் முதல்வராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்தது. வேணுகோபால், சதீசன், ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கிடையே போட்டி நிலவியதால் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பார்லிமென்ட் குழுத் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு சதீசனின் பெயர் இறுதி செய்யப்பட்டது. இந்த முடிவை டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தீபா தாஸ்முன்ஷி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

காங்கிரஸ் சட்டசபை குழு, கார்கே அங்கீகரிக்கும் நபரையே புதிய சட்டசபைத் தலைவராக ஒருமனதாக ஏற்க வேண்டும் என்று முன்பே தீர்மானித்ததாக தாஸ்முன்ஷி கூறினார். அவர் கேரளா சென்றடைந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும், பின்னர் நடைபெறும் பதவியேற்பு விழாவில் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பரவூர் தொகுதியில் இருந்து ஆறாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வான சதீசன், கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டவர்.