சமீபத்திய சட்டசபை தேர்தலில் தி.மு.க. சந்தித்த தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை தவிர்த்து, கட்சியை மீளமைக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றும், புதிய அரசு தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த தேர்தலில் நடந்தது “புது விதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி” போன்ற தாக்கம் என அவர் கூறினார். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனிப்பட்ட பிரச்னைகளை ஆராய்ந்து, அனைத்து மட்ட நிர்வாகிகளிடமும் தொகுதி வாரியாக கருத்து கேட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமைப்பு மாற்றங்களுக்கு முன் அனைவரும் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், கோஷ்டி அரசியலை விட்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டுமென கேட்டார். மேலும், சமூக வலைதளங்கள் புதிய அரசியல் களமாக உருவெடுத்துள்ளதால், கட்சியினர் நேரடியாக பங்கேற்று செயல்பட வேண்டும்; பிரசார முறைகளும் நடத்தைகளும் மாற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
செயல்பட முடியாது என நினைக்கும் மாவட்ட செயலர்கள் விலகலாம் என்றும் ஸ்டாலின் கூறினார். இந்த தோல்வி தற்காலிகமானது; திட்டமிட்டு தீவிரமாக உழைத்து மீண்டும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




