வாகனப் போக்குவரத்தையும் செலவையும் குறைக்கும் நோக்கில், வாரத்தில் இரண்டு நாட்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

இதன்படி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இனி நேரடி (நேரில்) விசாரணை நடைபெறாது. பயணம் குறைவதால் எரிபொருள் பயன்பாடும் குறையும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாட்டை குறைக்கவும், சாத்தியமான இடங்களில் வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையை தொடங்கவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து பல தரப்பினரும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கோர்ட்டுக்கு வரும் நீதிபதிகள் இனி கார்கள் பகிர்ந்து பயன்படுத்துவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் ஊழியர்களில் 50% பேருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.