சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படாததால், அமைச்சர்கள் கையெழுத்திட வேண்டிய சுமார் 3,000 கோப்புகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

மே 10-ம் தேதி அமைச்சரவை பொறுப்பேற்ற நிலையில், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய ஒன்பது பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு இதுவரை துறை ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை.

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெறுவதும், காங்கிரஸ் மற்றும் வி.சி.க.க்கு அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்த ஆலோசனைகளும் இந்த தாமதத்திற்கு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், சட்டசபையில் அரசு பெரும்பான்மையை நிரூபித்தபோது ஆதரவளித்த சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அணியிலிருந்து அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்தும் பேச்சு நடப்பதாக தகவல்.

மார்ச் மாதம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து, ஓட்டு எண்ணிக்கைக்குப் பிறகு மே 6-ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டன. அதன் பின்னரும் அரசு பதவி ஏற்ற பின்னரும் பல்வேறு பணிகள் தொடர்பாக அனைத்து துறைகளிலும் கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அமைச்சர்கள் கையெழுத்திட்டால்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை முன்னேற முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த 10 நாட்களில் கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்க வேண்டிய நிலையில், அதன் பின்னர் பட்ஜெட் தாக்கல், விவாதம், மானிய கோரிக்கைகள் போன்ற பணிகளும் வரிசையாக உள்ளன. துறை ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாக இருப்பதால் ஆய்வு கூட்டங்கள் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அரசு பணிகள் தொய்வின்றி நடைபெற துறைகளை விரைவில் ஒதுக்க முதல்வர் உத்தரவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக இந்த தகவல் குறிப்பிடுகிறது.