சென்னை: அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரும் மாவட்ட–ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்ததாகவும், பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமியை ஆதரிக்கும் 22 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் கட்சிக்குள் பிளவு வெளிப்படையாகியுள்ளது.
இந்த சூழலில், வேலுமணி தரப்புக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படும் 25 மாவட்ட செயலர்களை பதவியிலிருந்து நீக்கி, அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட செயலர்களை பழனிசாமி நியமித்துள்ளார். கட்சியில் பொதுச்செயலருக்கே அதிக அதிகாரம் என்பதால், நீக்கப்பட்டவர்கள் பொதுக்குழுவில் பங்கேற்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இரு தரப்பினரும் நிர்வாகிகளிடம் ஆதரவுக் கையெழுத்துகளைப் பெறும் முயற்சியில் இறங்கியதால் கட்சிக்குள் பரபரப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், சென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் பழனிசாமி மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார்; புதிதாக நியமிக்கப்பட்ட 25 மாவட்ட செயலர்களும் இதில் பங்கேற்றனர். அப்போது, “கட்சி நம்மிடமே உள்ளது” என்ற நம்பிக்கையூட்டும் வகையில் அவர் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.
மற்றொரு புறம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சண்முகம் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி, பதவி நீக்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்துள்ளனர். வேலுமணி வெளியிட்ட அறிக்கையில், த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்தது அரசியல் அறம் என்ற அடிப்படையில் எடுத்த முடிவு எனவும், யாரையும் அவமரியாதை செய்யவோ கட்சியைப் பிரிக்கவோ எண்ணமில்லை எனவும் கூறி, பழனிசாமி அழைத்தால் பேசத் தயாரெனவும், கட்சியின் பொதுச்செயலர் அவர் தான் எனவும் தெரிவித்துள்ளார்.





