சென்னை: அ.தி.மு.க.வில் நீடிக்கும் உட்கட்சிப் பூசலை தீர்க்கும் நோக்கில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் சிறப்பு ஹோமம் மற்றும் வழிபாடுகளை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்சி பிளவுபட்ட நிலையில், மீண்டும் ஒன்றுபடவும் பழைய செல்வாக்கை மீட்டெடுக்கவும் சில நிர்வாகிகள் ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, சென்னை எம்.ஆர்.சி. நகரில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் அதிகாலை நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் கூடி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தினர். அங்கு கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை சரிசெய்வது குறித்து ஆலோசனைகளும் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அதே நாள் இரவு 10 மணியளவில் சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு தேங்காய், எலுமிச்சை சுற்றுவது உள்ளிட்ட திருஷ்டி கழிக்கும் சடங்குகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கட்சிக்கு ஏற்பட்டதாக கருதப்படும் தடைகள் விலகவும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணம் நிறைவேறவும், கட்சி அவர்கள் கட்டுப்பாட்டிற்கு வரவும் இந்த பரிகாரம் நடத்தப்பட்டதாக தகவல் கூறுகிறது.