சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து, கட்சியில் சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்க தி.மு.க. 36 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை அமைத்துள்ளது. கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி இந்த குழு அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் எழிலரசன், சோழராஜன், பூச்சி முருகன், ஜெகன் பெரியசாமி, சரவணன், இளையராஜா, முரசொலி எம்.பி., சேலம் உமாராணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளில் கருத்துகள் சேகரிக்கப்பட உள்ளன.
ஆய்வு பணியின் ஒரு பகுதியாக, மாவட்டச் செயலர், தொகுதி பார்வையாளர், வேட்பாளர், தொகுதிக்குட்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்களிடமும் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்படும் என கூறப்படுகிறது.
கருத்து கேட்கும் நேரத்தில் மாவட்டச் செயலர்கள், தொகுதி பார்வையாளர், வேட்பாளர் உள்ளிட்டோர் உடன் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கும் நிர்வாகிகளின் வருகையை பதிவேட்டில் முறையாக பதிவு செய்யவும் கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், கள ஆய்வுக்கு நியமிக்கப்பட்டவர்களில் சிலர் கட்சியின் சட்டத் திட்டங்களை முழுமையாக அறியாதவர்கள் இருக்கலாம் என்ற கவலை கட்சிக்குள் எழுந்துள்ளது. இதனால் தோல்விக்கான உண்மை காரணங்கள் மறைக்கப்பட்டு பொய் தகவல் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி, கட்சியினர் கூறும் கருத்துகளையும் காரணங்களையும் நேரடியாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.





