மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன், இந்தியத் திரைத்துறையில் வெளிநாடுகளில் அதிகச் செலவில் நடைபெறும் படப்பிடிப்புகளை குறைத்து, நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய தயாரிப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், மேற்காசியாவில் நீடிக்கும் நெருக்கடிகள் காரணமாக உலகளவில் எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை மீது அழுத்தம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இதன் தாக்கமாக இந்தியாவிலும் எரிபொருள், தளவாடங்கள் உள்ளிட்ட செலவுகள் உயர்ந்து, தயாரிப்பு செலவுகள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்றார்.
தயாரிப்பு செலவுகள் உயர்வது திரைப்படத் தயாரிப்பை மட்டும் பாதிக்காது; வரவிருக்கும் மாதங்களில் பொழுதுபோக்கிற்கான நுகர்வோர் செலவிடும் முறையிலும் மாற்றம் வரக்கூடும் என அவர் எச்சரித்தார். இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள் என முழுத் துறையிலும் பிரதிபலிக்கும் என்றார்.
அதே நேரத்தில், செலவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் தொழிலாளர்களின் ஊதியம், பாதுகாப்பு, உணவு, போக்குவரத்து, தங்குமிடம் போன்ற அடிப்படை அம்சங்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மாறாக, அதிக விரயம், திட்டமிடல் குறைபாடு, தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள், தயாரிப்புத் தாமதங்கள் மற்றும் செலவுக்கும் நோக்கத்திற்கும் இடையிலான தொடர்பின்மை ஆகியவற்றில்தான் திருத்தம் தேவை என தெரிவித்தார்.
இதற்காக தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி தளத்தினர் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். படப்பிடிப்பில் ஒழுக்கம், ஆடம்பரச் செலவுகளை குறைத்தல், வெளிநாட்டு பயணங்களை கட்டுப்படுத்தல், நாட்டுக்குள் உள்ள படப்பிடிப்புத் தளங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை அதிகம் பயன்படுத்துதல் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்றும், நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.





