விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி தொடர்பான போக்சோ வழக்கில், மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தை உதவி எண் 1098 மூலம் வரும் புகார்கள் உள்ளிட்ட குழந்தைகள் தொடர்பான விவகாரங்களை கையாளும் அலுவலர்களுக்கான தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்னிலையில், சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், சிறுமி நாள் முழுவதும் மொபைல் பயன்படுத்தியதை தந்தை கண்டித்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த சூழலில் சிறுமி 1098-ஐ தொடர்பு கொண்டதாகவும் வாதிடப்பட்டது.

நீதிமன்றத்தில் பதிவான வாக்குமூலத்தில், பெற்றோர் சண்டையை தணிக்கவே 1098-ஐ தொடர்பு கொண்டதாகவும், அழைப்பை ஏற்ற அலுவலர் தந்தை தவறாக தொட்டது போல புகார் அளிக்க வற்புறுத்தியதால் அத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவும் சிறுமி தெரிவித்ததாக நீதிபதி குறிப்பிட்டார். மேலும், தன்னை 5 நாட்கள் காப்பகத்தில் வைத்ததாகவும், தந்தைக்கு எதிராக புகார் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் மிரட்டியதாகவும் அவர் கூறியதாக நீதிமன்றம் பதிவு செய்தது.

இத்தகைய வற்புறுத்தல் உண்மையாக இருந்தால் அது அதிகார துஷ்பிரயோகம் என்றும், குழந்தைக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதோடு குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களின் நடைமுறைகளின் புனிதத்தன்மையையும் பாதிக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. 1098 புகார்களுக்கு பதிலளிக்கும் அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு, காப்பகங்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் பொருத்தமான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், சிறுமி அழைத்தபோது பணியில் இருந்த 1098 அலுவலர் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விசாரித்து, ஜூலை 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது. சிறுமியின் உளவியல் பாதிப்பிற்காக மாவட்ட கலெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.