மதுரை கிழக்கு தவெக எம்எல்ஏ கார்த்திகேயன், தனது தொகுதியில் சட்டவிரோத மது விற்பனையும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையும் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மதுரை போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீட்சித்திடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பும் கடை மூடிய பிறகும் விடிய விடிய மது விற்பனை நடப்பதாகத் தெரிவித்து, இதனால் இரவு நேர குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 717 மதுக்கடைகளை முதற்கட்டமாக மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டதை குறிப்பிட்டு, அதேபோல் மதுரை கிழக்கு பகுதிகளில் உள்ள கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மது மட்டுமின்றி கஞ்சா, கூல் லிப், எஸ்.எஸ்.டி., ஸ்டாம்ப், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும் முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். தன் தொகுதியில் இவ்வகை விற்பனை தொடர்ந்தால் பொதுமக்களுடன் இணைந்து போராடவும் தயங்கமாட்டேன் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.