நெதர்லாந்து பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹேக் நகரில் பாரம்பரிய முறையில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்புக்குப் பிறகு அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்தியா–நெதர்லாந்து உறவு தொடர்ந்து வளர்ந்து வருவதாகக் கூறிய அவர், உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தாலும் இந்தியர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் காக்கிறார்கள் என பாராட்டினார். 140 கோடி இந்தியர்கள் சார்பில் நெதர்லாந்து மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்; அங்கு இருப்பது பண்டிகை சூழலை நினைவூட்டுவதாகவும் கூறினார்.

இந்தியா பல துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி மற்றும் சாதனைகளின் காலகட்டத்தில் இருப்பதாகக் கூறிய மோடி, “யாரும் சென்றிராத உயரத்தை இந்தியா எட்டியுள்ளது” என தெரிவித்தார். சமீப ஆண்டுகளில் உலகளாவிய ஏஐ தொடர்பான உச்சிமாநாடு மற்றும் ஜி20 உச்சிமாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதை அவர் எடுத்துக்காட்டினார்.

விண்வெளி ஆய்வில் இந்தியா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாகவும், நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் வேகமாக வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். உலகளவில் நடைபெறும் மொத்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பாதிக்கும் மேல் இந்தியாவில் நடைபெறுகிறது என்றும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மே 16 நாள் முக்கியத்துவம் கொண்டது என குறிப்பிட்ட மோடி, 2014-ஆம் ஆண்டு இதே நாளில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு பெரும்பான்மையுடன் அரசு அமைந்ததை நினைவுகூர்ந்தார். மக்கள் பெரிய கனவுகளுடன் முன்னேறுகிறார்கள் என்றும், அணுசக்தி மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும், 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்து இந்தியாவிடம் ஒப்படைத்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.