அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பல்வேறு கோணங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, ஆன்லைன் தேர்வு முறைகேடுகளை கட்டுப்படுத்த உதவும் எனக் கூறினார். அதே நேரத்தில், ஊரகத் தேர்வு மையங்களில் அதிவேக இணைய வசதி மற்றும் தடையற்ற மின்சாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், நாடு முழுவதும் ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தி நடைமுறை சிக்கல்களை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த உடனே நீட் நடத்தினால் முறைகேடுகளுக்கான வாய்ப்பு குறையும் என்றார்.
லெனின்பாரதி, கணினி வழித் தேர்வை வரவேற்றாலும், வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளின் முக்கியக் களம் பயிற்சி மையங்களே எனக் குறிப்பிட்டார். பள்ளி, கல்லூரி, பல்கலைகள் போல எந்த இணைப்பு முறையும் இல்லாமல் பல மையங்கள் தொடங்கப்படுவதையும், அரசுக் கட்டுப்பாடின்றி இயங்குவது ஆபத்தானதையும் சுட்டினார். இதனால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிரந்தர கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி, நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு தரநிலையை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.
ரவீந்திரநாத், ஆன்லைன் முறையை ஆதரித்து தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார். தேசிய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே நீட் நடத்தி, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ஏழை மாணவர்களுக்காக உணவு-இருப்பிட வசதியுடன் மாவட்டம்தோறும் தேசிய தேர்வு முகமை இலவச பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் என்றும் கூறினார். இதற்கு மாறாக நெடுஞ்செழியன், ஆன்லைன் தேர்வால் மோசடிகள் குறையும் என உறுதி கூற முடியாது; மாறாக குளறுபடிகள் அதிகரிக்கலாம் என எச்சரித்தார். மாநிலங்களே தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், 15% தேசிய ஒதுக்கீட்டிற்காக மட்டும் நீட் நடத்தி, முறைகேடு கண்டறியப்படும் மாநிலத்தில் மட்டும் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு வைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.





