ஹைதராபாத்: தமிழக முதல்வர் விஜயுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதை நிறுத்த வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

சமீப நாட்களாக சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும், நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த விஜயின் வளர்ச்சியுடன், பவன் கல்யாணின் அரசியல் பயணத்தை ஒப்பிட்டு பேசும் போக்கு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பின்னணியாக, பவன் கல்யாண் 2019-ல் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடப்படுகிறது.

மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சி தலைமையகத்தில் தொண்டர்களிடம் உரையாற்றிய பவன் கல்யாண், விஜய் முதல்வராக பதவியேற்றதிலிருந்து மக்கள் தரப்பில் இருந்து தனக்கு அழுத்தம் இருப்பதாக தெரிவித்தார். அண்டை மாநிலத்தில் ஒரு நடிகர் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்துள்ளார்; அதுபோல ஆந்திராவிலும் ஏன் முடியவில்லை என்று பலர் குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் கூறினார்.

அண்டை தெருவில் திருமணம் நடந்தால் தங்கள் வீட்டிலேயே நடக்கிறது போல குழந்தைகள் மகிழ்வது போன்றதாக இந்த ஒப்பீடுகள் இருப்பதாக கூறிய அவர், ஆந்திராவும் தமிழகமும் வேறு; இரு மாநிலங்களின் அரசியல் நிலைமைகள் ஒன்றல்ல என்றார்.

2019 தேர்தல் அனுபவத்தை நினைவுபடுத்திய அவர், மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்றும், தன் அமைச்சர்களே உடன் இருந்து ஆதரவு தரவில்லை என்றும் கூறினார். எனவே மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். உரையின் போது அவர் விஜய் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், “அவர்” என்று மட்டுமே குறிப்பிட்டார்.