தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுடன் தொடர்புடைய குடி மையங்களில் நடந்த குற்றச் சம்பவங்கள் மற்றும் அதனுடன் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை போலீசார் கணக்கெடுப்பின் மூலம் சேகரித்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு கடந்த ஐந்து ஆண்டுகளை மையமாகக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் 160க்கும் மேற்பட்ட கடைகளை மூடியுள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட நேரத்தில் டாஸ்மாக் கடைகளை கட்டாயம் மூட வேண்டும் என்றும், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

போலீசார் கூறுகையில், சில குடி மையங்களில் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தனர். மாநிலத்தின் பல பகுதிகளில் உரிமம் இன்றி குடி மையங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டதாகவும், அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதும், அதிக நேரம் திறந்து வைத்திருப்பதும் தெரிய வந்ததாகவும் கூறினர்.

உரிமம் இல்லாமல் செயல்பட்ட குடி மையங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.