அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவை முடித்து கட்சியை ஒன்றிணைக்க நடிகர் ரஜினிகாந்த் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரஜினி மக்கள் மன்றத்துடன் தொடர்புடைய சில நிர்வாகிகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கூறுகையில், ரஜினி நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் தமிழக அரசியல் நிலவரங்களை தொடர்ந்து கவனித்து வருகிறார். சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் சந்தித்ததாகவும், அதன் பின்னர் தி.மு.க.–அ.தி.மு.க. கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் அது பலனளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையில் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. மீது ரஜினிக்கு எப்போதும் ஒரு பிரியம் இருப்பதாகவும், அதனால் கடந்த ஒரு வாரமாக கட்சிக்குள் நடக்கும் பிரச்னைகள் குறித்து தன்னிடம் நெருக்கமானவர்கள் மூலம் தகவல் திரட்டி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மன்ற நிர்வாகிகளுடனும் தமிழக பா.ஜ.க.வில் உள்ள நெருங்கிய நண்பர்களுடனும் அவர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ‘தமிழகத்துக்கு அ.தி.மு.க. அவசியம்; உங்களுக்குள் சண்டை போடாமல் இணைந்து பணியாற்றுங்கள்’ என அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அவர் நேரடியாக பேசியதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் அரசியலுக்கு வராமல் போனதை நினைத்து வருந்தும் ரஜினி, அ.தி.மு.க. பிளவு குறித்து கவலைப்படுவதாகவும் கூறப்படுகிறது. வயதும் உடல்நலனும் ஒத்துழைத்தால் களத்தில் இறங்கி கட்சியை சீரமைப்பது குறித்து யோசித்து வருவதாகவும், உரிய நேரத்தில் முடிவு எடுப்பார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.