திருச்சியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம், 2012 மார்ச் மாதத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை.
முதலில் திருச்சி மாநகர போலீசார், பின்னர் சி.பி.சி.ஐ.டி., அதற்குப் பிறகு சி.பி.ஐ. என பல்வேறு அமைப்புகள் விசாரித்தும் தீர்வு கிடைக்கவில்லை. 2021ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின், எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, திருச்சியில் தனி அலுவலகமும் தொடங்கப்பட்டது.
அதன்பிறகும் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. சுமார் ஒரு ஆண்டுக்கு முன் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. வருண்குமார் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, புதிய குழுவுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், இதுவரை முன்னேற்றம் இல்லை.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவில் பணியாற்றிய போலீசாரை அவர்கள் முன்பு பணியாற்றிய இடங்களுக்கு திரும்பச் செல்ல உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த சிறப்பு புலனாய்வு குழு கலைக்கப்பட்டிருக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.





