காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், பார்லிமென்ட் நடைமுறை நெறிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டினார்.

டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த எம்.பி.யும் வெளிநாடு செல்ல திட்டமிட்டால் பாதுகாப்பு காரணங்களுக்காக குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்பே லோக்சபா அல்லது ராஜ்யசபா செயலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை இருப்பதாக கூறினார். சில பயணங்கள் குறித்து சபாநாயகர் அல்லது அவரது செயலகத்துக்கு தகவல் பகிரப்படாதது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.

எம்.பி.க்கள் வெளிநாடு செல்ல தடையில்லை என்றும், அழைப்பவர்களே செலவுகளை ஏற்கலாம் என்றும் அவர் கூறினார். ஆனால் அந்த செலவுகள் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் வரம்புக்குள் வருவதால், பயணம் மற்றும் செலவுகள் தொடர்பான விவரங்கள் உள்துறை அமைச்சகத்துடன் பகிரப்பட வேண்டும் என்றார்.

கடந்த 20 ஆண்டுகளில் ராகுல் அளித்த வருமான அறிவிப்புகளுக்கும் வெளிநாட்டு பயணச் செலவுகளுக்கும் பெரிய முரண்பாடு இருப்பதாக பா.ஜ. முன்வைத்த குற்றச்சாட்டையும் ரிஜிஜு குறிப்பிட்டார். தேர்தல் பிரமாண பத்திரத்தில் அறிவித்த வருமானத்தை விட பயணச் செலவுகள் அதிகமாக இருந்தால் வருமான வரித்துறைக்கு அது கவலைக்குரியதாக இருக்கும் என்றும், இதற்கு காங்கிரஸ் பதில் அளிக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.