கொல்கட்டா: பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும் பிரபல பொருளாதார நிபுணருமான சஞ்சீவ் சன்யால், மேற்கு வங்கத்தின் நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார். அவருடன் ஐந்து அமைச்சர்களும் பதவியேற்ற நிலையில், சுவேந்து அதிகாரி தற்போது உள்துறை, கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுடன் நிதித்துறையையும் ஒருங்கே கவனித்து வருகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பொருளாதாரத் திறன் கொண்டவர்கள் குறைவாக உள்ளதாக கூறப்படும் சூழலில், நிதித்துறைக்கு அனுபவம் வாய்ந்த ஒருவரை கொண்டு வருவது குறித்து ஆலோசனைகள் நடப்பதாக தகவல். இதுபோல் அனுபவமிக்க அரசு அதிகாரிகளை உயர்பதவிகளுக்கு கொண்டு வருவது பா.ஜ.க.க்கு புதிதல்ல என்றும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி போன்ற உதாரணங்களை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுவேந்து அதிகாரியின் பதவியேற்பு விழாவில் சஞ்சீவ் சன்யால் பாரம்பரிய உடையில் பங்கேற்றதும் இந்த ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளது. மேலும், மேற்கு வங்கத்தின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் தற்போதைய தேக்க நிலையிலிருந்து மாநிலத்தை மீட்டெடுப்பது குறித்து அவர் ஊடக பேட்டிகள் மற்றும் கட்டுரைகள் மூலம் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சுவேந்து அதிகாரி போட்டியிட்ட இரு தொகுதிகளில் பவானிபூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, நந்திகிராம் தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். நந்திகிராமில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சஞ்சீவ் சன்யால் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அது அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான பாதையை உருவாக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கிறது.





