உன்னாவ் பாலியல் வழக்கில் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்திருந்த டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. இதன் மூலம் உயர் நீதிமன்றம் வழங்கிய தளர்வுகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கு, உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி 2017ல் அளித்த புகாரைத் தொடர்ந்து உருவானது. வேலை கேட்டு அப்போது பாங்கர்மாவ் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த செங்கரை அணுகிய சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. புகாரில் நடவடிக்கை இல்லை என கூறி, முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டுமுன் சிறுமியும் அவரது தாயும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சிறுமியின் தந்தை வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், அதில் செங்கரின் ஆதரவாளர்கள் தொடர்புடையதாகவும் கூறப்பட்டது. மேலும், விசாரணை தொடர்பாக சிறுமி, அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் சென்ற காரில் லாரி மோதியதில் இரு உறவினர்கள் உயிரிழந்தனர்; சிறுமியும் வழக்கறிஞரும் படுகாயங்களுடன் உயிர்தப்பினர்.
பின்னர் சி.பி.ஐ. விசாரணைக்குப் பிறகு, டில்லி தீஸ் ஹஜார் நீதிமன்றம் 2019ல் போக்சோ சட்டத்தின் கீழ் செங்கருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தது. சிறுமியின் தந்தை உயிரிழந்த வழக்கில் மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.
இந்த தண்டனைகளை எதிர்த்து செங்கர் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் டில்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமினும் வழங்கியது. இதை எதிர்த்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வு, மக்கள் பிரதிநிதி என்பதால் ‘பொது ஊழியர்’ என்ற அடிப்படையில் போக்சோ தண்டனை விதிக்க முடியாது என்ற உயர் நீதிமன்றக் கருத்தை ஏற்க முடியாது எனக் கூறி, நிறுத்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான மனுவை டில்லி உயர் நீதிமன்றம் புதிதாக விசாரித்து இரண்டு மாதங்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், அது நடக்காவிட்டால் செங்கர் ஜாமினுக்காக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உத்தரவிட்டது.





