திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் நிர்மல் குமாரின் தரிசனத்துக்காக மதிய நடை அடைப்பு நேரம் மாற்றப்பட்டதாக கூறப்படுவதால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த அமைச்சர், திருப்பரங்குன்றம் தொகுதியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் மதியம் 12.55 மணியளவில் கோவிலுக்கு வந்தார். கோவில் முன்பாக கட்சியினர் வரவேற்ற நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோவிலில் வழக்கமாக மதியம் 12.30 மணிக்கு உச்சிகால பூஜை தொடங்கும்; 12.45 மணிக்கு ராஜகோபுரத்தின் கீழுள்ள பெரிய கதவுகள் சாத்தப்பட்டு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். கூட்டம் அதிகமான நாட்கள், திருமண நாட்களிலும் இதே நடைமுறை தொடரும்; விழாக்காலங்களில் மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால் நேற்று அமைச்சர் மதியம் 1.00 மணியளவில் கோவிலுக்குள் சென்றதாகவும், 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் மூலஸ்தானத்தில் தரிசனம் முடித்து 1.15 மணியளவில் வெளியே வந்த பின்னரே நடை சாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கமான வெளியேறும் பாதைக்கு பதிலாக பெரிய நிலை கதவு திறக்கப்பட்டு முன்பக்க வாசல் வழியாக அவர் வெளியே அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சரின் தரிசன வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, முன்னுரிமை வழங்கப்பட்டதாகக் கருதி பக்தர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.