தமிழக அமைச்சரவையில் யாருக்கு எந்த இலாகா என்பதற்கான பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை கவர்னர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
முதல்வர் விஜய்க்கு பொது நிர்வாகம், உள்துறை மற்றும் காவல் துறை, சிறப்புத் திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மகளிர், இளைஞர், குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் நலத் துறைகளும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகமும் அவரிடமே உள்ளது.
செங்கோட்டையன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்; நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் ஆகியவை அவரின் பொறுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளன. என். ஆனந்துக்கு ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள், வறுமை ஒழிப்புத் திட்டம், பாசனத் திட்டங்கள்; ஆதவுக்கு பொதுப்பணி (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டு; அருண்ராஜுக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலம் ஒதுக்கப்பட்டுள்ளன.
வெங்கட்ரமணனுக்கு உணவுத்துறை, பொது விநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு வழங்கப்பட்டுள்ளது. நிர்மல்குமாருக்கு மின்சாரம், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்டவற்றுடன் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், லஞ்ச ஒழிப்பு, சட்டசபை, கவர்னர் மாளிகை, தேர்தல், பாஸ்போர்ட் ஆகிய பொறுப்புகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜ்மோகனுக்கு தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் கலாசாரம், செய்தி-விளம்பரம், பிலிம் தொழில்நுட்பம், செய்தித்தாள் கட்டுப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
டி.கே. பிரபுவுக்கு சுரங்கம் மற்றும் கனிமவளம் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கீர்த்தனாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் அமைச்சரவையில் மிக இளம்வயது அமைச்சர் எனவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.





