பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக அபுதாபி சென்று, யு.ஏ.இ. அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானன.

பேச்சுவார்த்தையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான, தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார். யு.ஏ.இ. மீது சமீபத்தில் நடந்த தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்தார். மேலும் ஈரான் போரின் போது இந்தியர்களுக்கு யு.ஏ.இ. வழங்கிய கவனிப்பு மற்றும் பாதுகாப்புக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் முக்கிய முடிவாக இந்தியாவில் ரூ.48,000 கோடி முதலீடு செய்ய யு.ஏ.இ. ஒப்புக்கொண்டது. இதில் ஆர்.பி.எல். வங்கியில் ரூ.28,800 கோடி, அபுதாபி முதலீட்டு ஆணையம் மூலம் உட்கட்டமைப்பு திட்டங்களில் ரூ.9,600 கோடி, மேலும் அபுதாபியின் ‘இன்டர்நேஷனல் ஹோல்டிங்’ நிறுவனம் மூலம் ‘சம்மான் கேபிடல்’ நிறுவனத்தில் ரூ.9,600 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.

எரிசக்தி துறையில், இந்தியாவில் உள்ள அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சேமிப்பை 3 கோடி பீப்பாய்களாக உயர்த்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதை மத்திய அரசின் ஐ.எஸ்.பி.ஆர்.எல். நிறுவனம் நிர்வகிக்கும்; கட்டணத்தை அபுதாபி நிறுவனம் செலுத்தும்; விற்பனையில் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் இந்தியன் ஆயில் மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் இடையே சமையல் எரிவாயு வினியோகத்துக்கான நீண்டகால ஒப்பந்தமும் கையெழுத்தானது.

கடல்சார் ஒத்துழைப்பில் குஜராத்தின் வாடினாரில் புதிய கப்பல் பழுதுபார்க்கும் மையம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரு நாடுகளின் சுங்க மற்றும் துறைமுக அதிகாரிகளை டிஜிட்டல் முறையில் இணைக்கும் ‘மைத்ரி’ மெய்நிகர் வர்த்தக வழித்தடமும் தொடங்கப்பட்டது; இது சரக்கு போக்குவரத்தின் நேரம் மற்றும் செலவை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப துறையில் அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர் தொகுப்புகள் அமைக்க நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது; இது செயற்கை நுண்ணறிவு முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யு.ஏ.இ. பயணத்தை முடித்த பிரதமர் மோடி அங்கிருந்து நெதர்லாந்து புறப்பட்டார்.