மதுரை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், பணியில் சேர்ந்த நாளிலிருந்து ஓய்வு பெறும் வரை ஒரே பதவியிலேயே பணியாற்ற வேண்டிய நிலை இருப்பதாக கூறி, பதவி உயர்வு நடைமுறையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

முதல்வர் விஜயிடம் அளித்த மனுவில், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை மருத்துவமனைகளில் உதவி டாக்டர்கள், டாக்டர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல நிலைகளில் பணியாற்றும் பணியாளர்களுடன் தாங்களும் பணிபுரிவதாக சங்கம் தெரிவித்தது. 20 வயதில் கால்நடை பராமரிப்பு உதவியாளராக சேர்ந்தவர்கள் 60 வயதில் அதே பதவியிலேயே ஓய்வு பெறுகிறோம் எனவும் கூறினர்.

துறையின் பிற பிரிவினருக்கு கால இடைவெளிகளில் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும், உதவி கால்நடை டாக்டர்கள் தொடர்ச்சியான பதவி உயர்வுகள் மூலம் கூடுதல் இயக்குனர் நிலை வரை செல்வதாகவும், கால்நடை ஆய்வாளர்கள் பல நிலைகளைக் கடந்து முதுநிலை மேற்பார்வையாளர் நிலை வரை உயர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், பிற அரசுத் துறைகளில் கீழ்நிலை பணிகளில் சேர்ந்தவர்களும் ஓய்வுக்கு முன் உயர்ந்த பதவிகளுக்கு முன்னேறுகிறார்கள் என எடுத்துக்காட்டினர். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்; ஆனால் தீர்வு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, கால்நடை பராமரிப்பு உதவியாளர்களுக்கு குறைந்தபட்சமாக 10 ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என சங்கம் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளது.