சென்னையில் டாஸ்மாக் மற்றும் எலைட் டாஸ்மாக் மதுக்கடைகள் இரவு 10 மணிக்குள் கட்டாயமாக மூடப்பட வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருந்த 717 கடைகள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்ட புதிய உத்தரவில் கடைகளின் செயல்பாட்டு நேரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் மற்றும் எலைட் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும்; எஃப்2 கடைகள் இரவு 10 மணிக்குள், எஃப்3 கடைகள் இரவு 12 மணிக்குள் மூடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரோந்து குழுவினர் மூடல் நடைமுறையை கண்காணித்து புகைப்படங்களை பதிவிட வேண்டும் என்றும், எஃப்2 மற்றும் எஃப்3 கடைகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்; அனுமதிக்கப்பட்ட இடம் மற்றும் நேரத்தை மீறி வேறு எங்கும் விற்பனை செய்யக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.