சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் தினமும் துறைவாரியாக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறையின் செயல்பாடு, முக்கியத்துவம் மற்றும் மக்கள்மீது ஏற்படும் தாக்கத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த ஆய்வுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, மது மற்றும் போதைப் பழக்கங்கள் பரவல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தி.மு.க. தோல்விக்கான காரணங்களாக பேசப்பட்ட நிலையில், காவல் துறை உள்ளிட்ட பெண்கள், இளைஞர், குழந்தைகள் நலன் தொடர்பான துறைகளை முதல்வர் விஜய் தன் வசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மகளிர் உரிமைத்தொகை போன்ற மக்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையையும் அவர் தன் பொறுப்பில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் கட்சி பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், நகர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், அதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளையும் அவர் தக்க வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு கூடுதலாக, சுகாதாரம், பள்ளிக்கல்வி, ஊரக வளர்ச்சி, டாஸ்மாக், போதைப்பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து, நேரடியாக கண்காணிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





