தமிழகத்தின் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலக் கடன் தொடர்பாக புதிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா கூறிய கருத்துகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்தக் கூற்றுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அரசு நிதி நிர்வாகம் குறித்த அடிப்படைப் புரிதல் இல்லாமையை வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, முந்தைய அரசு ரூ.10.50 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளதாக கூறினார். மேலும், கடன் நிலவரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகே திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து சமூக வலைதள பதிவில் தங்கம் தென்னரசு, ஆதாரமில்லாமல் நிதி நிர்வாகத்தைப் பற்றி இட்டுக்கட்டி பேசுவதாக குற்றம்சாட்டினார். இத்தகைய பேச்சுகள் அவதூறு பரப்புவதோடு, சமூக வலைதள ஜோடனைகள் மூலம் மக்களிடையே தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் உள்ள நிதியமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நிதித்துறை செயலாளர் போன்றோர் இந்தக் கூற்றுகளைத் திருத்த முன்வருவார்களா, அல்லது அவர் “பொய்யும் புனைகதைகளும்” என குறிப்பிட்ட மலிவான பிரசாரங்களுக்கு துணை போவார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.





