புதுடில்லியில் இம்மாத இறுதியில் தமிழக முதல்வர் விஜய் வருகை தர உள்ள நிலையில், அவர் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
முதல்வர் தங்கும் தமிழக இல்லம் வரை விமான நிலையத்திலிருந்து வரவேற்பு ஏற்பாடுகளை செய்ய த.வெ.க. தொண்டர்கள் தயாராக உள்ளனர். கட்சி கொடிகள் கட்டுதல், வரவேற்பு போஸ்டர்கள் அச்சிடுதல் போன்ற பணிகளும் நடைபெறுகின்றன.
மேலும், டில்லியிலிருந்து தமிழகம் சென்று ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்ததாக கூறப்படும் 400க்கும் மேற்பட்டோர், முதல்வரின் டில்லி வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். டில்லியில் உள்ள தமிழ் அமைப்புகளும் அவரை வரவேற்று பாராட்ட தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
டில்லியில் தங்கும் காலத்தில், மத்திய அரசில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு மாலை சிற்றுண்டி வழங்கி, அவர்களுடன் ஆலோசனை நடத்தலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தூதர்கள் முதல்வரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சந்திப்புக்கு வெளியுறவு அமைச்சக அனுமதி தேவை என்பதால், பல நாடுகளின் தூதரகங்கள் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளதாகவும், தமிழகத்தின் வெளிநாட்டு கொள்கை மற்றும் அன்னிய முதலீடுகள் தொடர்பான நிலைப்பாடு குறித்து அறிய அவர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





