புதுடில்லி: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததைத் தொடர்ந்து நாடு முழுதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அமைப்பை கலைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டாக்டர்கள் அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு மே 3-ம் தேதி நடைபெற்றதாகவும், சுமார் 23 லட்சம் பேர் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில், நடந்து முடிந்த தேர்வை என்.டி.ஏ ரத்து செய்து, ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவித்து வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தி கூறுகிறது.
ஐக்கிய டாக்டர்கள் முன்னணி அமைப்பின் தலைவர் டாக்டர் லக்ஷய மிட்டல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முதன்மை தேர்வு அமைப்பு 1860-ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற தன்னார்வ அமைப்பு போன்ற கட்டமைப்பில் இயங்குவது அநீதியென வாதிடப்பட்டுள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் தொடரும் முறைகேடுகள் சமத்துவ உரிமை மற்றும் வாழ்வாதார உரிமை உள்ளிட்ட அரசியலமைப்பு உரிமைகளை பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்.டி.ஏ-வை உடனடியாக கலைத்து, பாராளுமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சட்டப்பூர்வ அந்தஸ்து கொண்ட புதிய தேசிய தேர்வு வாரியத்தை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனு கோருகிறது. புதிய அமைப்பு சி.ஏ.ஜி. தணிக்கைக்கு உட்பட வேண்டும்; வலுவான சைபர் பாதுகாப்பும் வினாத்தாள் கசிவு தடுப்பு பிரிவுகளும் இருக்க வேண்டும்; மேலும் எதிர்கால தேசிய அளவிலான தேர்வுகள் முழுமையான நேர்மையுடன் நடைபெற உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் தற்காலிக குழு அமைக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





