உணவில் அஸ்வகந்தா செடியின் இலை சார்ந்த பொருட்கள் மற்றும் இலை/வேர் சாற்றை பயன்படுத்தக் கூடாது என இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) வெளியிட்ட ஆலோசனை உத்தரவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. வெளியிட்ட அறிவுறுத்தலில், ‘அமுக்கரா கிழங்கு’ என அழைக்கப்படும் அஸ்வகந்தா கிழங்கு மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களே உணவு தயாரிப்பில் அனுமதிக்கப்படுகின்றன; அஸ்வகந்தா இலைகள் மற்றும் அவை சார்ந்த பொருட்களுக்கு தடை என குறிப்பிடப்பட்டது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, இலைகளில் சில வேதிப்பொருட்கள் அதிகமாக இருப்பதால் கல்லீரல், இரைப்பை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரித்தது.
மேலும், தடை செய்யப்பட்ட இலைகளை உணவு தயாரிப்பில் பயன்படுத்தினால் மாநில உணவு பாதுகாப்பு அமைப்புகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் பொருட்களின் பெயர்களை லேபிளில் குறிப்பிட வேண்டும் என்றும் கூறி, மீறினால் 2006 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவால் அஸ்வகந்தாவுக்கு பெரிய சந்தை உள்ள நிலையில் விவசாயிகள், சாறு எடுப்பவர்கள் மற்றும் ஆயுஷ் துறையுடன் தொடர்புடைய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதை எதிர்த்து ‘சமி சபின்சா குரூப் லிமிடெட்’ மற்றும் ‘கெர்ரி இன்க்’ நிறுவனங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.
நீதிபதி கிருஷ்ணகுமார் முன் நடந்த விசாரணையில், மனுதாரர்கள் கடந்த 30 ஆண்டுகளாக அஸ்வகந்தா சார்ந்த தயாரிப்புகளை உருவாக்கி வருவதாகவும், இதுவரை கடுமையான பாதுகாப்புச் சிக்கல்கள் கண்டறியப்படவில்லை என்றும் வாதிட்டனர். மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர விதிகள் 2016-ல் அதிகாரப்பூர்வ திருத்தம் செய்யாமல் வெறும் ஆலோசனை கடிதம் மூலம் தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரப்பு ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கை ஜூன் 8க்கு ஒத்திவைத்தது.





