புதுடில்லி: டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனம் உள்நாட்டிலேயே முழுமையாக தயாரித்த முதல் ‘ஏர்பஸ் சி-295’ ராணுவ போக்குவரத்து விமானம், விரைவில் இந்திய விமான படையில் (IAF) முறைப்படி இணைக்கப்பட உள்ளது.

இந்த திட்டம், 2021-ல் மத்திய அரசு ஸ்பெயினுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. ரூ.21,935 கோடி மதிப்பில் 56 ‘சி-295’ விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அதில் 16 விமானங்கள் ஸ்பெயினிலிருந்து நேரடியாக பறக்கக்கூடிய நிலையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. மீதமுள்ள 40 விமானங்கள் குஜராத் வதோதராவில் TASL மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

இந்த இணைப்பு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி/விமானத் துறை உற்பத்தி சூழலில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக ராணுவ விமான உற்பத்தி பெரும்பாலும் அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தை மையமாகக் கொண்டிருந்த நிலையில், இத்திட்டம் உற்பத்தி தளத்தை விரிவுபடுத்தும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், விமான படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி வதோதராவில் உள்ள டாடா தொழிற்சாலைக்கு நேரில் சென்று, சோதனை ஓட்டத்துக்குத் தயாராகும் விமானத்தின் இறுதிக்கட்ட பணிகளை ஆய்வு செய்தார். இறக்குமதி சார்பை குறைத்து, உள்நாட்டு தளவாட மற்றும் செயல்பாட்டு திறனை வலுப்படுத்தும் சுயசார்பு முயற்சியாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

செயல்பாட்டு ரீதியாக, ‘சி-295’ விமானம் ஜம்மு-காஷ்மீர், லே-லடாக், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற கடினமான மலைப்பகுதிகளில் பயன்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய, தார் இடப்படாத ஓடுதளங்களிலும் இயக்க முடியும்; 9.5 டன் சரக்கு அல்லது 70 வீரர்கள் வரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. உளவுப் பணிகள், மருத்துவ அவசர மீட்பு, பேரிடர் நிவாரணம் போன்ற பணிகளுக்கும் ஏற்றதாகவும், மணிக்கு 482 கி.மீ. வேகம் மற்றும் 5,000 கி.மீ. வரை பறக்கும் தூரம் கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.