உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில், இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவியிடம் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் உதவி பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விலங்கியல் துறையில் பணியாற்றும் பரம்ஜித் சிங் மீது, கடந்த சில நாட்களாக மாணவிக்கு தொல்லை கொடுத்ததாக புகார் உள்ளது. மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புதல், தனியாக வரவழைத்து அத்துமீற முயற்சித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரின் படி, அவர் குரல் வழி குறுஞ்செய்தி ஒன்றில், தேர்வுக்கான இரண்டு வினாத்தாள்களை வைத்திருப்பதாகவும், தனியாக வந்து சந்தித்தால் அவற்றை தருவதாகவும் கூறியதாக மாணவி தெரிவித்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி பல்கலை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். பல்கலை கட்டுப்பாட்டாளர் வித்யானந்த் திரிபாதி அளித்த புகாரின் அடிப்படையில் ஹசன்கஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து பரம்ஜித் சிங்கை கைது செய்தனர்.

இதற்கிடையில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பரம்ஜித் சிங் மறுத்துள்ளார். பல்கலைக்கழகத்தில் நிலவும் அரசியல் காரணங்களால் தன்னை பழிவாங்குகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.